அறக்கட்டளை

     ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஆன்றோர்வக்கு. நமது இந்து தர்மத்தின் அடிப்படை ஆதாரங்களாக விளங்கி மக்களுக்கு நெறியான வாழ்கையை அருளும் தலங்களாகவே நமது நாட்டில் ஆலயங்கள் அமைந்துள்ளன. நமது பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் நெறிகள் அறஉணர்வு, கலைத்திறமை, சமுக ஒருங்கிணைப்பு என்ற எல்லா பரிமாணங்களையும் ஒன்றிணைக்கும் அமைப்புகளாகவே நம்முடைய ஆலயங்கள் பண்டைக் காலம் முதல் இருந்து வந்துள்ளன. எனவேதான் நமது பாரத தேசம் முழுமைக்கும் மற்றும் தென்நாட்டின் தமிழகத்தின் பல்வேறு மாமன்னர்களும் பெரும் ஆலயங்களை எழுப்பியும் அதனை போற்றியும், பொன் வேய்ந்தும் புகழ் பரப்பினார்கள். மனிதன் தன் நிலையில் செமையுற வாழ்ந்து பின் தெய்வ நிலை அடையும் வகையிலான வாழ்வியல் முறைக்கு ஊடகமாக  ஆலையங்கள் அமைந்தன என்பது உண்மை . எனவேதான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க  வேண்டாம் என்ற முதுமொழியும் ஏற்பட்டது . இப்படிப்பட்ட  தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஆலய வழிபாட்டை முறைபடுத்தவும், வழிநடத்தவும் , வலுபடுத்தவும் , ஆலயங்களை சீரமைக்கவும், சிறப்புற விழாக்கள் ஏற்படுத்தவும், மேன்மைகொள் சைவநீதி மிகுந்து விளங்கும் தொண்டை மண்டலத்தின் பெருமைகளை மீட்டெடுத்து நிலைநிறுத்தும் வண்ணமும் கருத்திற் கொண்டு இறைவன் திருவருளே முன்னிற்க தர்மாரண்யா ஷேத்ரம் என வழங்கப் பெரும் புராதன சிறப்புமிக்க தொழில் வளமும் அருள் நலமும் கொண்டதான ஆரணி நகரில் அருள்மிகு லோகநாயகி சமேத பூமிநாதர் சிவாலய சேவா அறக்கட்டளையானது 2001ம் ஆண்டு (29-10-2001) துவங்கப்பட்டது .

     மேற்சொல்லப்பட்ட காரணங்களை முன்னிறுத்தி துவங்கப்பட்ட இவறக்கட்டளையின் சார்பாக ஆரணி சைதாப்பேட்டையில் புராதன சிறப்புமிக்க சுயம்பு மூர்த்தியாகிய பூமிநாதப் பெருமானுக்கு முற்றிலும் புதிய ஒரு சிவாலயம் நிர்மாணிக்கப்பட்டது அதன் கும்பாபிஷேகம்  (1.6.2006) அன்று நடைப்பெற்றது. பிறகு இரண்டாம் கட்ட திருப்பணிகள் துவங்கப்பட்டு அதில் கோயிலில் பரிவார சன்னதிகள் மற்றும் உற்சவ மண்டபம் மற்றும் மூன்று நிலை இராஜகோபுரம் மற்றும் மதிர்சுவர் ஆகியவைகள் ஏற்படுத்தப்பட்டு கடந்த 23.01.2013 அன்று மகாகும்பாபிஷேகா விழாவானது பல்வேறு அருளாளர்கள், ஆதீன குருமகா சன்னிதானங்கள்  முன்னிலையில் வெகு சிறப்புடன் நடந்தேறியது. கடந்து 12 ஆண்டுகளாக இவ்வறக்கட்டளை சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட புராதன கோயில்கள் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகங்கள் செய்விக்கப்பட்டுள்ளன். பல்வேறு திருகோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கான  திரவியங்கள்   வழங்கப்பட்டும் பெரும் அளவிலான அன்னதானங்களும் இவ்வறக்கட்டளை மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

     இந்த அறக்கட்டளையின் சார்பாக திருக்கோயில்கள் புனரமைப்பு திருப்பணி மற்றும் குடமுழக்கு விழாவிற்கான பொருட்கள் உதவி , அன்னதானம் மற்றும் ஆடைகள் தானம் தவிர பாரம்பரிய விழாக்கள் நடத்த உதவி, பல்வேறு அறக்கட்டளைகளுடன் இணைந்து கல்வி உதவி ஆகியவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது .