மேன்மைகொள் சைவநீதி மிகுந்து விளங்கும் சான்றோடைய தொண்டை மண்டலத்தில் பட்டு மாநகரம் என்று மக்களால் போற்றப்படுகின்றதும் , தசரத மகா புராணத்தில் தரமாரண்ய ஷேத்திரம் என்று புகழப்படுவதுமாகிய ஆரணி மாநகரத்தின் மேற்பகுதில் கமண்டல நாக நதிக்கரையின் தென்பால் வயல்வெளிக்கிடையே எம்பெருமானாரின் திருக்கோயில் புராதனமாய் அமைந்திருந்து காலப்போக்கில் அத்திருகோயில் சிதைந்து பூமியில் புதையுண்டு போக , தானே வலிய வந்து ஆட்கொண்டருளும் தனிப்பெருங்கருனையில் 1996ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13ம் தேதி. இறைவனுடைய இலிங்கத் திருமேனியும் நந்தியெம் பெருமானின் திருமூர்த்தம் கண்டறியப்பட்டு அவ்விடத்தை அகழ்ந்து திருகோயிலின் ஆதார அமைப்பு அறியப்பட்டு ஈசன்பால் அன்புடைய அன்பர்களால் அங்கு வழிபாடு செய்யப்பட்டு வந்தது.இவ்வழிப்பாட்டை வலுப்படுத்த இத்திருகோயிலை திருத்தி அமைத்திட முன்னவனே முன்னின்றால் முடியாதும் உள்ளதோ என்ற முதுமொழி சார் பேரன்புடைய பெரியோர்கள் சார்பில் 2002ம் ஆண்டில் [ 26-10-2002 ] அருள்மிகு லோகநாயகி சமேத பூமிநாதர் சிவாலய சேவா அறக்கட்டளை என்ற அமைப்பு இறைவன் திருவருள் துணைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளையின் சார்பாக இத்திருயிலை புனராவர்த்தனம் செய்ய வேண்டும் என்கின்ற பெருநோக்கோடு இத்திருக்கோயிலின் புராதன வரலாற்றைத் தெரிந்து , கொள்ளும் வகையில் அதற்குரிய முறையான கேரளத்தின் தேவ பிரசன்னம் என்கிற பிரசன்னரூட முறைப்படி கேரளாவின் பிரபல பிரசன்ன கர்த்தராகிய பையனூர் ஸ்ரீ நாராயண போதுவாள் அவர்களிடம் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது.அப்பிரசன்னத்தில் படியாக இத்திருகோயில் தசரத மகாசக்கரவத்தின் காலத்தை சார்ந்தென்றும் கலமண்டல நாகநதி தீரத்தில் சப்த ரிஷிகளில் காஷ்யப ரிஷீயால் பூஜிக்கப்பட்ட சுயம்பு திருமேனி உடைய சதாசிவர் என்னும் நாமமுடைய பெருமானின் திருக்கோயில் இது என்றும் பிரசன்னத்தில் கூறப்பட்டது.பிறகு அங்கிருந்து எடுக்கப்பட்ட பிற சிற்பங்கலாகிய சப்த மாதாக்கள் ஸ்ரீ விஷ்ணு , துர்க்கை ,வீரபத்திரர் ,கால பைரவர் ஆகிய திருவுருவங்களைக் கொண்டு தோல் பொருள் துறையினரின் உதவியால் இவைகள் சோழர் காலத்தைச் சார்ந்தவை என்றும் சோழப் பேரரசின் கீழ் ஆட்சிபுரிந்த சம்புவராய மன்னர்களின் காலத்திர்க்குரியவை என்றும் அறிந்து கொள்ள முடிந்தது.
பிறகு தேவ பிரசன்னம் ரீதியாக பூமியில் புதையுண்டு போன இப்பெருமானின் திருமேனிக்கு சக்தியூட்டும் வகையில் பன்னெடுங்காலம் வழிபாடு இல்லமால் இருந்தற்கான பிராயசித்தம் செய்யும் வகையில் 2002ம் ஆண்டு மாசிமகா நன்னாளில் துவங்கப்பட்டு ஐந்து நாட்கள் தொடர்ந்து பலவித சிறப்பு ஹோமங்கள் , ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி பரிபூரண சாந்நித்தியத்தை அடையப் பெற்றவுடன் 21.06.2002 அன்று இத்திருக்கோயிலின் சுவாமிக்கு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் துவங்கப்பட்டன.
இறைவன் திருவருளே முன்னின்று நடத்த இத்திருகோயிலின் புனராவர்த்தனப் பணிகள் நடைபெற்று இத்திருவிடத்தில் தற்பொழுது சதுரஸ்த ஏகதள விமானத்துடன் கூடிய சுவாமி சன்னதி,
தெற்கு நோக்கிய வகையில் மகா மண்டபத்துடன் கூடிய அம்பாள் சன்னதி,முன் மண்டபத்துடன் கூடிய ஸ்ரீ விநாயகர் சன்னதி ,ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேதசண்முகர் சன்னதி செக்கிழாருடன் கூடிய நால்வர் சன்னதி ,சப்த மாதாக்கள் சன்னதி மற்றும் காலபைரவர் சன்னதி , நவக்கிரக சன்னதி ஆகிய சன்னதிகள் சிவாகம் முறைப்படி மகாவித்வான்கள் ,அருளாளர்கள் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படியும் ,அவர்களின் அருளாசியுடனும் நிர்மாணிக்கப்பட்டு இறைவன் இதயத்தே மகிழ்ந்திருக்கும் எழில் கொஞ்சும் இனிய திருகோயிலாக இத்திருகோயில் பொழிவு பெற்று மங்களகரமான விய வருடம் வைகாசி மாதம் 18ம் தேதி 1.06.2006 வியாழன்கிழமை வளர்பிறை பஞ்சமி திதி , பூச நட்சத்திரத்தில் காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நித்ய ,நைமித்ய பூஜைகளும் , உத்ஸவங்களும் ,நடைபெற்று இறையருள் பொலிந்த வண்ணம் சிவலாயத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திருப்பணிகள் 23.8.2010 அன்று துவங்கப்பட்டு இதில் கிழக்கு நோக்கிய முன்று நிலை இராஜகோபுரம் மற்றும் ம்ஹா மண்டப மேற்புரத்தில் இந்திர விமானங்கள் மற்றும் கதை வேலைகள் அமைத்தல்,மஹா மண்டபத்துண்களில் சிற்ப வேலைபாடுகள் அமைத்தல் ,உற்சவர் மற்றும் வாகனகளுகான அறை , நந்தவனம் அமைத்தல் ,கோயில் பிராகாச் சுற்றுசுவர் அமைத்தல் .கோயில் உட்புறம் தரைத்தளம் அமைத்தல்.சுவாமி திருக்கல்யாண மண்டபம் அமைத்தல் ஆகிய திருப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு சேக்கிழார் சேர்ந்த ஐவர் சன்னதி மற்றும் சப்த மாதர்கள் சன்னதி ,காலபைரவர் சன்னதி மற்றும் நவக்கிரக சன்னதி ஆகியவைகள் முற்றிலும் நூதனமாக புதுப்பிக்கப்பட்டு பொலிவு பெற்று ராஐகோபுரம் மற்றும் அனைத்து சன்னதிகளுககான மஹா கும்பிஷேகம் விழாவானது மங்களகரமான நந்தன வருஷம் தை மாதம் 10ம் தேதி 23.01.2013 புதன் கிழமை துவாதசி திதி , மிருகசீரிஷ நட்சத்திரம் ,சித்தயோகம் கூடிய சுபதினத்தில் தொண்டை மண்டல மகான்கள் மற்றும் ஆதீன குருமகா சன்னிதானங்கள் ,அருளாளர்கள் ,சான்றோர் பெருமக்கள் முன்னிநிலையில் இறையருள் துணைக்கொண்டு வெகு சிறப்பாக நடந்தேறியது.
‘முன்னவனே முன்னின்றால் முடியாதும் உளதோ’ என்பதற்கினங்க இறைவன் தனிப்பெருங்கருனையில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்று ,மக்கள் மண்ணில் நால்வண்ணம் வாழலாம் வைகமும் எண்ணில் நல்கதிகும் யாதுமோர் குறைவிலை என்பதாய் அடியார் பெருமக்கள் ஆன்ம நலம் அடையவும் உலகியல் வாழ்வில் உவந்த சிறக்கவும் உமைமணாளனின் கருணை வெள்ளமாய் உன்னதமாக இவ்வாலயம் சீர்மிகு வழிபாட்டிர்குரியதாக உள்ளது என்பது மகிழ்வாகும் .